கொய் மீன்களை வளர்ப்பதற்காகத் தனது வீட்டு வாசற் படிக்கட்டுகள் அமைந்திருக்கும் இடத்தை மீன் தொட்டியாக மாற்றிய வீட்டு உரிமையாளர் அந்தத் தொட்டியை அகற்றியிருக்கிறார். தொட்டியை அப்படியே வைத்திருக்க அவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு செய்துள்ளார்.
கிட்டத்தட்ட பத்து மீன்களை வளர்ப்பதற்காகத் திரு டான் என்ற அந்த ஆடவர், தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 41லுள்ள தனது வீட்டு முன்வாசல் கதவுக்கு வெளியிலுள்ள படிக்கட்டுகளில் நான்கு பக்கங்களிலும் கண்ணாடிச் சட்டங்களைப் பொருத்தி அந்த இடத்தை மீன் தொட்டியாக மாற்றினார்.
இதற்கு அனுமதி தேவைப்படும் என்று அறியாமல் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு தாம் செய்ததாகத் திரு டான் கூறினார். பாதுகாப்பு அக்கறைகள் காரணமாக அந்த ஆடவர் தொடர்ந்து தொட்டியை வைத்திருக்க முடியாது என்று வீவக கடந்த ஜனவரி தெரிவித்தது. அதற்கடுத்து தெம்பனீஸ் நகர மன்றத்துடன் இணைந்து திரு டான் கழகத்திடம் முறையிட்டார்.
வீட்டு வாசலுக்கு வெளியிலுள்ள படிக்கட்டுகள் பொதுச்சொத்தாக இருப்பது திரு டானின் மேல்முறையீட்டை நிராகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று வீவக கூறியது.
நகர மன்றத்தின் துணைச்சட்டங்களின்படி பொதுச்சொத்தில் அதிகாரபூர்வமற்ற அறைகலன்கள் அல்லது கருவிகளைப் பொருத்துவது குற்றமாகும்.
வான்பாவ் நாளிதழின் செய்தியாளர் ஒருவர் திரு டானின் வீட்டுக்குச் சென்றபோது மீன் தொட்டி அகற்றப்பட்டுள்ளதைக் கண்டார்.
தொட்டியை அகற்றுவது தொடர்பாக அறிவிப்புக் கடிதம் கொடுத்துள்ளதாக தெம்பனீஸ் நகர மன்றம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது. தொட்டியை அகற்றுவதற்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனைத் திரு டான் ஏற்கவில்லை என்றும் மன்றம் கூறியது. "மீன்களைச் சமூகக் குளம் ஒன்றுக்கு மாற்றப் பரிந்துரைப்பதற்காக நாங்கள் வீட்டுக் குடியிருப்பாளரை அணுகினோம். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அவருக்கு ஆர்வமில்லை," என்றும் அந்த மன்றம் கூறியது.

