நிலப் போக்குவரத்து ஆணையம் கிட்டத்தட்ட 64 மில்லியன் வெள்ளி செலவில் மூன்று கதவுகள் உள்ள இரண்டு அடுக்கு 'இயூரோ 6 டீசல்' பேருந்துகளைத் தருவிக்கவுள்ளது. அந்தப் பேருந்துகள் அடுத்த ஆண்டில் இருந்து பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ஆணையம் கூறியது.
நூறு பேருந்துகளில் பாதி அலெக்சாண்டர் டென்னில் (சிங்கப்பூர்) நிறுவனத்திடமிருந்தும் மீதி 'எஸ்டி என்ஜினியரிங் லேண்ட் சிஸ்டம்ஸ்' நிறுவனத்திடமிருந்தும் தருவிக்கப்படும். இத்தகைய பேருந்துகளுக்கான ஆகப் பெரிய கொள்முதல் நடைபெறுவது இதுவே முதல் முறை.
இந்த வகை பேருந்து ஏற்கனவே சிங்கப்பூர்ப் பொதுப் போக்குவரத்து அமைப்பில் சோதனை செய்யப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 'டவர் டிரான்சிட்' போக்குவரத்து நிறுவனம் 143 சேவை எண்ணுக்காக இந்தப் பேருந்தைப் பயன்படுத்தியது. அதேபோல் ஜூன் 2017ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2018ஆம் ஆண்டு வரை 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் 190, 901 ஆகிய சேவை எண்களுக்கு இந்தப் பேருந்தைப் பயன்படுத்தியது.
மூன்றாவது கதவால் பயணிகள் இன்னும் விரைவாகவும் சரளமாகவும் பேருந்துகளில் ஏறி இறங்க முடியும் என்பதால் அவர்கள் இதை வரவேற்பதாக ஆணையம் தெரிவித்தது.

