தொழில்நுட்பத்தையும் சமூக ஊடகங்களையும் தவறாகப் பயன்படுத்தும் விஷமக்காரர்கள் பரப்பும் பொய்ச் செய்திகளைத் தடுக்க சட்டம் இயற்றுவது முக்கிய தீர்வுகளில் ஒன்றாக இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.
தவறான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களைத் திருத்தி எழுதச் சொல்வதற்கும் தவறு மிகக் கடுமையாக இருந்தால் அந்தத் தளங்களையே மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கும் தேவைப்படும் அதிகாரத்தை இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட மசோதா அரசாங்கத்திற்கு வழங்கும் என்று பிரதமர் கூறினார்.
பசிபிக் நாடுகளுக்கிடையிலான வழக்கறிஞர் சங்க கூட்டத்தில் பேசிய பிரதமர் லீ, பல நாடுகளைப் பாதிக்கும் பொய்ச்செய்தி பரப்பும் பரந்தளவிலான போக்கை எதிர்கொள்ள சிங்கப்பூர் தனது சட்டங்களில் எவ்வகையான மாற்றங்களைச் செய்து வருகிறது என்பதற்கு உதாரணமாக ஏப்ரல் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவுச் சட்டத்தைச் சுட்டினார்.
பயங்கரவாதத்தை தடுக்கவும் வன்முறைக்குத் தூண்டுவோரை தடுக்கவும் தனிமனிதர் சுதந்திரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இடையே ஒரு சமநிலையைக் காணவேண்டும். மேலும், இணைய வர்த்தகம் வளர்ந்துவரும் வேளையில், வர்த்தகங்கள் செயல்படும் வெவ்வேறு செயல்பாடுகள் தொடர்பாக எழும் வரிவிதிப்பது போன்ற சட்டப்பிரச்சினைகளுக்கு இடையேயும் சமநிலை காணவேண்டும் என்று திரு லீ தெரிவித்தார்.
தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பொய்ச்செய்தியின் பரவல், உலக நாடுகள் கையாளவேண்டிய மற்றொரு மாற்றம் என்றார் பிரதமர் லீ. இதனைக் கையாள உலக நாடுகள் புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினர்.
ஒவ்வொரு நாடும் அதன் அரசியல் மரபுக்கும் சமூக பண்புகளுக்கும் ஏற்ற தீர்வுகளைக் கையாள்வர் என்றும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான தீர்வுகள் ஏதும் இல்லை என்றும் திரு லீ தெரிவித்தார்.

