கடந்தாண்டின் இறுதி காலாண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகள் குறைவான எண்ணிக்கையில் மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை 14.2 விழுக்காடு குறைந்து 4,853 ஆகப் பதிவாகியுள்ளது. ஆயினும் கடந்தாண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் எண்ணிக்கை 8.5 விழுக்காடு அதிகமாக உள்ளது.
வீவக வீடுகளின் மறுவிற்பனை விலை காலாண்டு அடிப்படையில் 0.3 விழுக்காடு குறைந்துள்ளதாக வீடமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. வீவக வீடுகளை வாடகைக்கு விடுவதற்கான விண்ணப்பங்கள் 2.6 விழுக்காடு உயர்ந்தது. விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2018-ன் நான்காம் காலாண்டில் இருந்த 11,479லிருந்து 2019-ன் முதல் காலாண்டில் 11,775க்குக் கூடியது.
கடந்தாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் பதிவான விண்ணப்பங்கள் 0.5 விழுக்காடு அதிகம். மார்ச் 31ஆம் தேதி கிடைத்த தகவலின்படி, 57,764 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 2018-ன் இறுதி காலாண்டில் பதிவான 56, 742 வீடுகளைக் காட்டிலும் இது 1.8 விழுக்காடு அதிகம்.
தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் 3,400 வீடுகளை வீவக அடுத்த மாதம் காலாங், வாம்போ, தெங்கா, உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் விற்பனைக்கு விடும்.

