எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் சேவை அண்மை காலமாக முன்னேற்றம் அடைந்தபோதும், அங்கு பணிபுரியும் பலர் வேலையிலிருந்து விலகியுள்ளனர். கடந்த எட்டு மாதங்களில் எஸ்எம்ஆர்டியின் மனிதவளப் பிரிவிலிருந்து கிட்டத்தட்ட 30 நிர்வாகிகளும் இரண்டு மூத்த பொறியாளர்களும் வேலையிலிருந்து விலகினர்.
நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பம், கொள்முதல், மனிதவளம், பயிற்சி ஆகியவற்றுக்கான தலைமை வர்த்தக அதிகாரி ஜெரல்ட் கோ பதவி விலகியதைத் தொடர்ந்து பலர் தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளனர். திரு கோ இப்போது என்சிஎஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவளப் பிரிவின் தலைவராக உள்ளார்.
பல்வேறு பதவிகளிலிருந்து மொத்தம் சுமார் 30 பேர் விலகி நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் அல்லது பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளனர் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் அறிகிறது.

