பூச்சி ஒழிப்பு நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவருக்குக் கையூட்டு வழங்கிய கட்டுமானத்தள மேற்பார்வையாளருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொசு இனப்பெருக்கச் சோதனை எப்போது நடத்தப்படும் என அறியவே 52 வயது முத்துக்கருப்பன் பெரியசாமி, அந்த இரண்டு ஊழியர்களுக்கு மொத்தம் 1,600 வெள்ளியை வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
'கில்லம் பெஸ்ட்' நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்த துங் சீ கியோங், சந்திரன் ஜெகன்னாதன் ஆகியோருக்கு பெரியசாமி கையூட்டு வழங்கியது தொடர்பில் ஜனவரி 18ஆம் தேதி அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்திய குடிமகனான பெரியசாமியிடம் கையூட்டு பெற்ற பூச்சி ஒழிப்பு நிறுவன ஊழியர்கள் இருவரும் மார்ச் 18ஆம் தேதி சிறை சென்றனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சிங்கப்பூரரான துங்கிற்கு 11 வார ஐந்து நாள் சிறைத்தண்டனையும் இந்திய குடிமகனான ஜெகன்னாதனுக்கு ஆறு வாரம் மூன்று நாள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. ஊழல் சம்பவங்களை மிகக் கடுமையாகக் கருதுவதாகவும் அத்தகைய சம்பவங்கள் சகிக்க முடியாதவை என்றும் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

