ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்றவர்கள் அடுத்த மாதம் முதல் ஸ்கில்ஸ்ஃபியூச்சரில் அடங்கும் பாடங்களில் மூன்று பாடங்கள் வரை இலவசமாகப் படிக்கலாம். பலதுறைத் தொழிற்கல்லூரியின் 'ஏஎஸ்ஏபி' எனப்படும் பட்டயம் பெற்றவர்களுக்கான புதிய மேம்பாட்டுத் திட்டத்தில் இந்த ஏற்பாடு அங்கம் வகிக்கிறது. 'ஏஎஸ்ஏபி' திட்டம் 2022ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என்று கல்லூரியின் முதல்வர் இயோ லி பியாவ் தெரிவித்துள்ளார்.
கல்லூரியின் பட்டயமளிப்பு விழாக்களில் ஒன்றில் பேசிய திரு இயோ, இந்தச் சலுகை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் எனத் தெரிவித்தார். "இதனால் இந்த ஏற்பாட்டின் பெயர் 'ஏஎஸ்ஏபி'. வகுப்புகளுக்குப் பதிவு செய்ய நீங்கள் அதிக நேரம் எடுக்கக்கூடாது," என்று அவர் கூறினார்.
200 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பாடங்களை ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி வழங்கும் என்று அவர் தெரிவித்தார். தொழில்துறையுடன் தொடர்பான இந்தப் பாடங்கள் வருங்காலத்தில் தேவைப்படும் புதிய திறன்களின்மீது கவனம் செலுத்தும். இவை ஒரு நாள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும்.
"வாழ்நாள் கற்றல் மீது பலதுறைத் தொழிற்கல்லூரி கொண்டுள்ள கடப்பாட்டை இந்தத் திட்டம் பிரதிபலிக்கிறது. நீங்களும் இதுபோன்ற கடப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என்றார் திரு இயோ. பட்டயமளிப்பு விழாவின்போது, ஹோட்டல் மற்றும் உபசரிப்பு நிர்வாகம், உணவகம் மற்றும் சமையல் நடவடிக்கை ஆகியவற்றின் தொடர்பான வேலைக்கு முந்திய பயிற்சிப் பாடங்களை முடித்தவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வாழ்நாள் கற்றல் தனிமனிதருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்தப் பொருளியலுக்கும் நல்லது என்று விழாவுக்கு வந்திருந்த கல்வி மற்றும் வர்த்தக மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் தெரிவித்தார். "போட்டிமிக்க சூழலில் முன்னிலை வகிக்க உபசரிப்புத் துறையின் மேம்பாட்டுக்கு அரசாங்கம், நிறுவனங்கள், ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது," என்று திரு சீ கூறினார்.
"புதிய தொழில்நுட்பம், வர்த்தக அமைப்புகள், சுற்றுலாத் துறை ஆகியவற்றில் புதிய போக்குகளை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவேண்டும்,"
"போட்டித்தன்மை இருக்கிறது. ஆனால் நாம் அனைவரும் செயல்பட்டால், போட்டித்தன்மைக்கு அப்பாற்பட்டு நாம் உயரலாம். இது, வேகமாக ஓடும் நீரில் செல்லும் படகின் நிலை போன்றது. முன்னோக்கிச் செல்லாவிட்டால் நீரோட்டம் நம்மை பின்னுக்குத் தள்ளிவிடும். இது முடிவில்லாத பயணம்," என்றார் அவர். திறன்களைப் புதுப்பிப்பதற்கும் புதிய வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் வாழ்நாள் முழுதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று திரு சீ சொன்னார்.

