மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறுவோர் இவ்வாரத்திற்குள் அதற்கான கடிதங்களைப் பெறுவர் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. கடந்த மாத இறுதிக்குள் ஏறக்குறைய 500,000 கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டன என்று அமைச்சு கூறியது.
மெர்டேக்கா தலைமுறையினரிடம் அந்தத் தொகுப்புத் திட்டத்தைப் பற்றிய விவரங்களைக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் மூத்த தலைமுறை அலுவலகம் கடந்த மாதம் இறங்கியது. தொண்டூழியம், கற்றல் வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றிய மேல் விவரங்களையும் மெர்டேக்கா தலைமுறையினருக்கு அது வழங்கி வருகிறது.
1950ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் 1959ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கும் இடையில் பிறந்து, 1996ஆம் ஆண்டு டிசம்பர் 31 தேதிக்குள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தவர்கள் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்கு தகுதி பெற முடியும்.
1949ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு பிறந்து, 1996ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் குடியுரிமை பெற்றவர்கள், முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தைப் பெறாவிட்டால், மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்கு தகுதி பெற முடியும்.
www.merdekageneration.sg என்ற இணையத்தளத்தில் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

