கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறு உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுடன் தொடர்புடைய மொத்தம் 56 பாலியல் முறைகேட்டுச் சம்பவங்களைக் கையாண்டதாக கல்வியமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவங்களில் பதினான்கு, பல்கலைக்கழகங்களின் வளாகத்திற்கு வெளியே நடந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை ( மே 6ஆம் தேதி) கூறினார். மறைவிலிருந்து பாலியல் செயல்களைப் பார்க்கும் சம்பவங்களின் அதிகரிப்பைக் கையாள வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டிய திரு ஓங், பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை "கண்டிப்புடனும், அதே வேளையில் நியாயமாகவும் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
56 சம்பவங்களில் 17 சம்பவங்கள் 2015ஆம் ஆண்டிலும் 18 சம்பவங்கள் 2016ஆம் ஆண்டிலும் 21 சம்பவங்கள் 2017ஆம் ஆண்டிலும் நடந்ததாகத் திரு ஓங் கூறினார். பாலியல் சம்பவங்களில் 66 விழுக்காட்டுச் சம்பவங்கள், மறைவிலிருந்து பாலியல் ரீதியாகப் பார்ப்பதும் படமெடுப்பதுமாக உள்ளதாக அவர் சொன்னார். 56 சம்பவங்களில் 25 சம்பவங்கள் தேசியப் பல்கலைக்கழத்திலிருந்து வந்தவை.
பல்கலைக்கழகத்திலுள்ள தங்குமிட விடுதி ஒன்றில் தன்னை மறைவிலிருந்து காணொளி எடுத்த மாணவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையாக இல்லை என்று மாணவி மோனிக்கா பே, இன்ஸ்டகிராம் தளத்தில் கூறியதை அடுத்து திரு ஓங் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
காணொளி எடுத்த 23 வயது மாணவன் நிக்கலஸ் லிம்மைப் பல்கலைக்கழகம் ஒரு பள்ளித் தவணைக்குப் பணிநீக்கம் செய்தது. அத்துடன் அவர் குமாரி பேக்கு மன்னிப்பு கடிதத்தை எழுதவேண்டும் எனப் பல்கலைக்கழகம் கோரியது. இதற்கிடையே மறைவிலிருந்து பாலியல் செயல்களைப் பார்க்கும் மற்றொரு சம்பவம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தைப் பல்கலைக்கழகம் விசாரித்து வருகிறது என்று அதன் பேச்சாளர் கூறியதாக 'த நியூ பேப்பர்' நாளிதழ் தெரிவித்தது.

