தனிநபர் நடமாட்ட சாதனங்களை நகர மன்றங்கள் தடை செய்யலாம்

தனிநபர் நடமாட்ட சாதனங்களை நகர மன்றங்கள் தடை செய்யலாம்

1 mins read
a4c06e13-b834-414c-baca-50f098c5cf93
-

தனிநபர் நடமாட்ட சாதனங்கள் வட்டாரவாசிகளின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாக நகர மன்றங்கள் கருதினால் அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யலாம் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் தெரிவித்திருக்கிறார்

நடைபாதைகள் போன்ற இடங்களில் இத்தகைய சாதனங்களின் பயன்பாட்டை துடிப்புமிக்க நடமாட்டச் சட்டம் (Active Mobility Act) கட்டுப்படுத்துகிறது. இருந்தபோதும், மின்தூக்கி முகப்புகள், தபால் பெட்டிகளுக்கான இடங்கள் உள்ளிட்டவை இடம்பெறும் வெற்றுத்தளப்பகுதிகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இணைப்புப் பாதைகளுக்குச் செல்ல இந்த இடங்கள் முக்கியமில்லாதவை என்று டாக்டர் லாம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

"இத்தகைய இடங்களில் தனிநபர் நடமாட்ட சாதனங்களின் பயன்பாடு குறித்த விதிமுறைகளை நகர மன்றங்கள் விதித்து செயல்படுத்த முடியும். விரும்பினால் அத்தகைய சாதனங்களை நகர மன்றங்கள் முற்றிலும் தடை செய்யலாம்," என்று டாக்டர் லாம், புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளையின் கேள்விக்குப் பதிலளித்தபோது கூறினார்.

வெற்றுத்தள இடங்களில் இந்த விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் போக்குவரத்து அமைச்சு தலைமை ஏற்று செயல்படுமா என்று திரு முரளி பிள்ளை கேட்டிருந்தார். நகர மன்றங்களுக்கிடையிலான அணுகுமுறை அவ்வளவு வேறுபட்டிருக்காது என்றும் திரு முரளி கருத்துரைத்தார். இதற்குப் பதிலளித்த டாக்டர் லாம், வெவ்வேறு வெற்றுத்தளங்கள் வெவ்வேறு விதமாக அமைக்கப்பட்டிருப்பதால் அந்தச் சாதனங்களைத் தடை செய்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க நகர மன்றங்களுக்கு நீக்குப்போக்கு இருக்கவேண்டும் என்றார்.