சிங்கப்பூரில் 500,000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணியிலமர்த்தியுள்ள 960க்கும் மேலான நிறுவனங்கள் ஊழியர்களிடையே அதிருப்தி, பாலியல் துன்புறுத்தல் புகார்கள் போன்றவற்றுக்கு எதிராக சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன.
புகார்களுக்கு எதிரான முத்தரப்பு பங்காளித்துவ அடிப்படையிலான திட்டத்தின்கீழ் இந்த நடைமுறைகளை நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து நடைமுறைப் படுத்தலாம். எனினும் இதில் தரநிலையை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை மனிதவள அமைச்சு கண் காணிக்கிறது என்று மனிதவள, கல்வி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் லோ யென் லிங் கூறினார்.
பணியிட துன்புறுத்தலை நிர்வகிக்கும் முத்தரப்பு ஆலோசனைக் குழுவின், வேலையிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை நிர்வகிக்கும் நடைமுறைகளை எத்தனை முதலாளிகள் பின்பற்றுகிறார்கள் என்பதை அமைச்சு கண்காணிப்பதில்லை என்ற நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தெசிராவின் அக்கறைக்கு பதிலளித்த அவர், அந்தக் குழு, நிறுவனங்களுக்கான துன்புறுத்தலைத் தடுக்கும் கொள்கை பிரதிகளை வழங்குவதுடன் பணியிட, பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விளக்கங்களையும் வழங்குவதாகக் கூறினார்.
பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள்வது நிறுவனங்களின் நடைமுறைகளில் உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு இத்தகைய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றும் முதலாளிகளை அடையாளம் காணவும் ஆலோசனைக் குழு உதவுகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஆலோசனை பெறுவது கட்டாயமல்ல என்றாலும், துன்புறுத்தல் புகார்களைக் கையாள்வதில் முதலாளிகள் போதிய நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் மதிப்பிடுவார்கள் என்றும் திருவாட்டி லோ கூறினார்.

