ஈசூன் ரயில் நிலையத்தின் சுரங்க நடைபாதையில் அமர்ந்து டிஷு தாட்களை விற்றுக்கொண்டிருந்த கண்பார்வையற்ற பெண்ணிடமிருந்து சில்லறைக் காசுகளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 64 வயது மூதாட்டி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கண்பார்வையற்ற பெண்ணையும் அந்த மூதாட்டியையும் காட்டும் படங்களை ஜசிக்கா வின்சன்ட் என்பவர் மே 1ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். இதற்கு ஒரு நாள் முன்பு, இரவு சுமார் 7.20 மணிக்கு நடைபாதையில் அமர்ந்திருந்த பெண்ணின் சில்லறைக் காசுகளை மூதாட்டி பறித்துச் சென்றதாக ஜசிக்கா தமது பதிவில் குறிப்பிட்டார்.
கண்பார்வையற்ற அந்தப் பெண் உடனே உதவிக்காகக் கூச்சலிட்டார். அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த மற்றொரு பெண் மூதாட்டியைத் துரத்திப் பிடிக்க முயன்றபோதும் மூதாட்டி அகப்படவில்லை. நடந்தது குறித்து தாம் போலிசாரிடம் புகார் செய்யப்போவதாக ஜசிக்கா தமது பதிவில் குறிப்பிட்டார்.
மே 2ஆம் தேதி பிற்பகல் 3 மணி வாக்கில் இந்தச் சம்பவம் குறித்த புகாரைப் பெற்றதாக போலிசார் தெரிவித்தனர். அதே நாளில் அவர்கள் மூதாட்டியைக் கைது செய்தனர். திருட்டுக் குற்றம் நிரூபனமானால் அந்த மூதாட்டிக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

