உள்ளாடை மட்டுமே அணிந்தபடி தூங்கிக்கொண்டிருந்தபோது தன்னைப் படமெடுத்த காதலனை ஓர் இளம்பெண், தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்திருக்கிறார். தற்போது 16 வயது இருக்கும் அந்தப் பெண்ணுக்கான நன்னடத்தை கண்காணிப்பு அறிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயதின் காரணமாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
கடந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி, தனது காதலனின் கைத்தொலைபேசியில் அந்த ஆபாசப் படங்கள் இருந்ததை இளம்பெண் கண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணுடன் அவரது நண்பர்களும் இருந்தனர். இதே போல தூங்கிக் கொண்டிருந்த மற்றோர் இளம்பெண்ணையும் அந்த இளையர் ஆபாசமாகப் படம் எடுத்ததையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
கோபப்பட்ட அந்தப் பெண்ணும் அவரது நண்பர்களும் சேர்ந்து இளையரைப் பலமுறை அடித்து உதைத்தனர்.
குறைந்த வயதுடைய அந்தப் பெண் தீய நோக்கத்துடன் அத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தன்மீது இழைக்கப்பட்ட அநீதிக்குப் பதிலடியாக இவ்வாறு அந்த இளையரைத் தாக்கியதாகவும் அரசாங்க வழக்கறிஞர் ஜோர்டன் லி தெரிவித்தார்.

