சிங்கப்பூர் கடற்கரை அருகே நேற்றுக் காலையில் மேகத்தில் இருந்து கடல் வரை நீண்டு பெரிய நீர்த்தாரை தோன்றியது.
தஞ்சோங் பகார் முனையத்திற்கு அருகே தோன்றிய அந்த நீர்த்தாரையைக் காட்டும் மூன்று காணொளிகளை கிரேஸ் இங் என்ற ஃபேஸ்புக் பயனாளர் பதிவேற்றி இருந்தார்.
அந்தக் காணொளிகள் சனிக்கிழமை காலை சுமார் 9 மணிக்கு எடுக்கப்பட்டதாக திருமதி கிரேஸ் இங்கின் கணவர் ஜஸ்டின் லிம், 31, கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அந்தப் படத்தை அவர்கள் 76 ஷெண்டன் வே முகவரியில் இருக்கும் தங்களுடைய வீட்டிலிருந்து எடுத்தனர். நீர்த்தாரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது என்றும் அவர்கள் கூறினர்.
நீர்த்தாரை என்பது கொஞ்ச நேரம் காணப்படும் பருவநிலை தோற்றமாகும்.
அது சிங்கப்பூரின் கடலோரங்களில் எப்போதாவது தெரிவதுண்டு. அவை கொஞ்ச நேரம் தென்பட்டு பிறகு மறைந்து விடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவிக்கிறது.
சில நேரங்களில் நீர்த்தாரைகள் அரை மணி நேரம் கூட நீடிப்பது உண்டு.
கருத்த வானம், மேகம் சூழந்த பின்னணியில், மேகத்தில் இருந்து கடல் வரை நீண்ட நீர்த்தாரை.

