பென்கூலன் பள்ளிவாசலுக்கு நான்கு மில்லியன் வெள்ளி செலவில் கட்டடப் புதுப்பிப்பு செய்யப்படவுள்ளது. அந்தப் பள்ளிவாசலுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொழுகை செய்வதற்கான இட வசதியை அமைத்துத்தர இந்தப் புதுப்பிப்பு செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை (மே 14) பென்கூலன் பள்ளிவாசலில் நிகழ்ந்த நோன்பு திறப்பின்போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்தியாவிலிருந்து இந்தோனீசியாவின் பெங்குவிற்குக் கொண்டுசென்ற இந்திய முஸ்லிம் ஊழியர்களால் 1825ஆம் ஆண்டுக்கும் 1828ஆம் ஆண்டுக்கும் இடையே அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டது.
புதுப்பிப்புத் திட்டத்திற்கான செலவு நான்கு மில்லியன் வெள்ளி. இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் இதற்கான பணிகள் தொடங்கும்.

