தண்டனையைக் கடுமையாக்க தேசிய பல்கலைக்கழகத்திடம் பரிந்துரை

தேசிய பல்கலைக்கழகம் பாலியல் முறைகேடுகளைக் கையாளும் விதத்தைப் பரிசீலிக்கும் குழு, அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்க பரிந்துரைத்துள்ளது. இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறைந்தது ஒரு கல்வி ஆண்டுக்குத் தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று அந்தக் குழுவைப் பிரதிநிதிக்கும் திருவாட்டி கே குவோக் பரிந்துரைத்திருக்கிறார். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் இணைக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்றில் அந்தப் பரிந்துரை குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடுகள் மிகக் கடுமையாக இருந்தால் அவற்றுக்குக் காரணமான மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்றும் அவர் அந்தச் சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

தற்காலிக நீக்கத்திற்குள்ளான மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்படும் முன்னர் அவர்களுக்கு மருத்துவ நிபுணர் அல்லது மனநல ஆலோசகர் மறுவாழ்வுச் சான்றிதழைக் கொடுக்கவேண்டும் என்றும் திருவாட்டி குவோக் பரிந்துரைத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட மாணவர்களின் நீக்கம் அவர்களது பல்கலைக்கழகச் சான்றிதழில் குறிப்பிடப்படும். 

பாலியல் முறைகேட்டில் முதல் முறையாக ஈடுபடும் மாணவர்களை தேசிய பல்கலைக்கழகம் மன்னிக்கும் கொள்கையை அதன் மாணவர்களும் பொதுமக்களும் குறைகூறியுள்ளனர். இத்தகைய கொள்கை கடுமையாக இல்லை என்று கல்வி அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருந்தார்.

பாலியல் குற்றத்தின் கடுமையைப் பிரதிபலிக்கும் விதமாகவும் அந்தக் குற்றங்களைச் செய்ய எண்ணுபவர்களைப் பின்வாங்கச் செய்யும் விதமாகவும் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் என்றார் திருவாட்டி குவோக். பாதிக்கப்பட்டோரைப் பராமரிக்கும் பிரிவு (Victim Care Unit) ஒன்றை அமைப்பது குறித்து குழு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த மூன்று வாரங்களுக்கு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை இந்தக் குழு நாடு என்று அவர் சொன்னார். ஜூன் மாதத்தின் மத்திய பகுதியில் அந்தக் குழு, இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடும்.