உணவங்காடிகளின் தூய்மைத்தரம் குறித்து சிங்கப்பூரர்கள் அதிருப்தி

உணவங்காடிகளின் தூய்மைத்தரம் குறித்து சிங்கப்பூரர்கள் அதிருப்தி

1 mins read
c9fb7d0d-999d-467d-88d0-a69c10f64575
-

முன்பைவிட இப்போது அதிகமானோர் உணவங்காடிகளில் சாப்பிட்டு முடித்தபின் தங்களது சாப்பாட்டுத் தட்டுகளைச் சொந்தமாகவே அப்புறப்படுத்துகிறார்கள். ஆயினும் உணவு உண்ணுவதற்கான பொது இடங்களின் தூய்மைத் தரம் திருப்திகரமாக இல்லை என்று பொதுச் சுகாதார திருப்தி குறித்த கருத்தாய்வு ஒன்று கூறுகிறது.

பல்வேறு பொது இடங்களின் உணவங்காடிகள் ஆகத் தூய்மையற்ற இடங்களாக இருப்பதாக கருத்தாய்வில் பங்குபெற்றோரில் 71.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இதனுடன் ஒப்புநோக்க, எம்ஆர்டி ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், சாலைகள் ஆகியவற்றின் தூய்மைத்தரம் திருப்திகரமாக இருப்பதாக கருத்தாய்வுக்குப் பதிலளித்தோரில் 94 விழுக்காட்டினர் கூறினர். பயணிகள் செல்லும் பாதைகள் குறித்து 84.8 விழுக்காட்டினரும் அக்கம்பக்கக் குடியிருப்பு குறித்து 79.3 விழுக்காட்டினரும் திருப்தியாக உள்ளதை இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

மக்கள் பெருவாரியாகக் கூடும் விளையாட்டரங்குகள் போன்ற பொது இடங்களில் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அங்குள்ள தூய்மைத்தரம் குறித்து 74.3 விழுக்காட்டினர் திருப்தியாக இருப்பதாகக் கடந்தாண்டின் கருத்தாய்வு குறிப்பிடுகிறது. இந்த விழுக்காடு, 2017ஆம் ஆண்டின் 62.6 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம்.

மிச்சமீதி சாப்பாடு, பயன்படுத்தப்பட்ட 'டி‌ஷு' தாட்கள் ஆகியவை மற்ற இடங்களைக் காட்டிலும் உணவங்காடிகளில் அதிகம் காணப்படுவதாகக் கருத்தாய்வுக்குப் பதிலளித்தோர் கூறுகின்றனர்.