கென்பரா லிங்க்கில் எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் கட்டுவதற்கான நிலப்பகுதியை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஏலக் குத்தகைக்கு விட்டுள்ளது. 16,690 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நிலப்பகுதியில் 385 வீடுகள் வரை கட்டப்படலாம் என்று வீவக வியாழக்கிழமை தெரிவித்தது.
நிலப்பகுதியின் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் மொத்த தரைப் பரப்பளவு 38,387 சதுர மீட்டர். அதன் அதிகபட்ச கட்டட உயரம், சராசரி கடல் மட்டத்திற்கு மேல் 45 மீட்டர் முதல் 55 மீட்டர் வரை. நிலப்பகுதியின் குத்தகைக் காலம் 99 ஆண்டுகள்.
அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டின் முதற்பாதிக்கான உறுதி செய்யப்பட்ட பட்டியலில் இந்த நிலப்பகுதி இடம்பெறுகிறது.
ஏலக்குத்தகை ஜூலை 3ஆம் தேதி நண்பகலில் முடிவடையும் என்றது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்.

