பொது ஊழியர்களைத் துன்புறுத்தியதன் பேரில் அறுவர் மீது குற்றச்சாட்டு

பொது ஊழியர்களைத் துன்புறுத்திய தனித்தனிச் சம்பவங்களின் தொடர்பில் ஆறு சிங்கப்பூரர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 

28 வயது எஸ் குல்பீர் சிங் ரக்பீர் சிங் விஜில் மீது ஆக அதிகமாக ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டான் டோக் செங் மருத்துவமனையில் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த சார்ஜண்ட் கூ வெய் சியேயைத் தாக்கிய குற்றச்சாட்டு அந்த ஐந்து குற்றச்சாட்டுகளில் ஒன்று. மற்ற நான்கு குற்றச் சாட்டுகள் கடந்தாண்டு நவம்பர் மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடையே நிகழ்ந்த சில சம்பவங் களுடன் தொடர்புடையவை. 10,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்ட சிங், ஜூன் 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

38 வயது ரந்தீர் நேரு என்பர் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். போலிஸ் அதிகாரி ஒருவரைக் கன்னத்தில் அடித்தது உள்ளிட்ட சில சம்பவங்களின் தொடர்பில் அவர்மீது அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மனோகர் ரமணன், 27, சந்திரன் சின்னத்தம்பி, 49, கோபால் ஜி பெருமாள், 58, ஆகியோர் மீது ஆளுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

ஆறாவது நபரான 20 வயது ரிச்சர்ட் டான் ஹான் வூன் மீது பொது ஊழிய ரைத் தாக்கியது தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும்.