'பிங்க் டாட்' எனும் நிகழ்ச்சியின் தூதராக நியமிக்கப்பட்டிருந்த உள்ளூர் நடிகர் டோஷ் ஸாங், அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில் கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார். 'எல்ஜிபிடிகியூ'வினருக்காக ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்ச்சிக்காக மூன்று நாட்களுக்கு முன்பாக அந்த நிகழ்ச்சிக்கான தூதர்களில் ஒருவராக டோஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.
'எல்ஜிபிடிகியூ'வினரைப் பற்றி 2010 முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் வெளியிட்ட கருத்துகளைச் சுட்டிக்காட்டி அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது பற்றி பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
'எல்ஜிபிடிகியூ' சமூகத்தையும் அவர்களது அன்பையும் கொண்டாடுவதுடன் அவர்களுக்கு சிங்கப்பூரில் சமத்துவம் அளிப்பதை வலியுறுத்துவதாகவும் 'பிங்க் டாட்' நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை வெளியிட்ட காணொளியில் தெரிவித்திருந்தார் டோஷ், 29. பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிறுவனாக இருந்தபோது தாம் தெரிவித்த கருத்துகள் அவை என்ற திரு டோஷ், தம்மிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் சமூக ஊடகத்தில் தம்முடன் இணைந்திருப்போருக்குத் தெரியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் காணொளி 23,000க்கு மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

