காதலியைக் கவர்ந்தவனைத் தாக்க ஆட்களை அனுப்பிய ஆடவர்

தனது கள்ளக் காதலி தன்னைவிட்டு வேறொருவரை நாடியது குறித்து ஆத்திரமடைந்த ஓர் ஆடவர், தனக்குப் போட்டியாக வந்தவரைத் தாக்க ஆட்களை அனுப்பினார். இந்தக் குற்றத்தைச் செய்த 55 வயது லிம் ஹொங் லியாங்கிற்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்ற திரு லிம், 2014ஆம் ஆண்டில் 27 வயது குமாரி ஆட்ரே சென் யின் ஃபாங்கைச் சந்தித்த பின்னர் இருவரும் கள்ள உறவில் இணைந்தனர். லிம் தனது சொந்த நிறுவனத்தில் அந்தப் பெண்ணுக்கு வேலையும் 2000 வெள்ளி சம்பளத்தையும் கொடுத்தார். வேலைக்குச் செல்லாமலேயே ஆட்ரே அந்தச் சம்பளத்தை வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் லிம், தனது கூட்டுரிமை வீடுகளில் ஒன்றில் ஆட்ரேயை வாடகையில்லாமல் தங்க அனுமதி தந்தார். மேலும், வெள்ளை நிற ‘மெர்சடிஸ்-பென்ஸ்’ காரை லிம் ஆட்ரேக்கு வாங்கிக்கொடுத்தார்

இந்த அன்பளிப்புகளைப் பெற்ற ஆட்ரே மற்ற ஆடவர்களுடன் பாலியல் தொடர்புகளை வைத்திராமல் தனக்கு மட்டும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று லிம் நிபந்தனை விடுத்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் வேறொருவருடன் உறவில் இருப்பதாக ஆட்ரே சமூக ஊடகங்களில் அறிவித்தார். இதனைக் கேள்விப்பட்டு லிம் ஆத்திரமடைந்து ஆட்ரேயின் புதிய காதலனான ஜோஷவா கோவைத் தாக்க சில ஆட்களை அனுப்பினார்.

ஜோஷவாவைத் தாக்கிய நான்கு ஆடவர்களுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே தண்டனை விதித்துள்ளது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்