தொழிலாளர் ஊனமடைந்த விபத்து: மேற்பார்வையாளருக்கு 9 வாரச் சிறை, நிறுவனத்திற்கு $210,000 அபராதம்

தொழிலாளர் ஊனமடைந்த விபத்து: மேற்பார்வையாளருக்கு 9 வாரச் சிறை, நிறுவனத்திற்கு $210,000 அபராதம்

2 mins read
ad4cad2c-af25-4d56-97e0-7d01107a2756
-

தொழிலாளர் ஒருவர் நிரந்தர ஊனமடைந்த விபத்தின் தொடர்பில் கட்டுமான மேற்பார்வையாளருக்கு ஒன்பது வாரச் சிறைத் தண்டனையும், அவரது முதலாளிக்கு $210,000 அபராதமும் விதிக்கப்பட்டது. "அவா குளோபல்" கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த சர்கார் மித்துன், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கட்டடம் ஒன்றில் உட்கூரை தகடுகளைப் பொருத்தும் பணியைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். பணியைச் செய்து கொண்டிருந்த மியா ஜொபாயத் என்பவர் நின்றுகொண்டிருந்த தகடு எதிர்பாராதவிதமாகத் திடீரென கழன்றதில் ஐந்தரை மீட்டர் உயரத்திலிருந்து தரையில் விழுந்தார். திரு ஜொபாயத்தின் முதுகெலும்பில் அடிபட்டு, நிரந்தர முடக்குவாதம் ஏற்பட்டதாக மனிதவள அமைச்சு புதன்கிழமை (மே 22) தெரிவித்தது. தகடுகளைப் பொருத்துவதற்குத் தேவையான அனுமதியை சர்கார் பெறவில்லை என்றும், பணியை மேற்கொள்ளும் முறையைச் சொந்தமாகத் தீர்மானித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. தொழிலாளர்கள் பாதுகாப்பு வார்கள் அணிந்திருப்பதையும் அவர் உறுதிப்படுத்தத் தவறினார். "அவா குளோபல்" நிறுவனம் சரியான பணிமுறையை நிலைநாட்டவில்லை என அமைச்சு கண்டறிந்தது. உயரமான இடத்தில் ஆபத்தான பணியைச் செய்வதற்கான அனுமதியையும் நிறுவனம் பெறத் தவறியது. அதோடு, தனது தொழிலாளர்கள் போதிய பயிற்சி பெற்றிருப்பதையும் சுயப் பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்துவதையும் உறுதிப்படுத்தத் தவறியது. பணியைத் தொடங்குமுன் முதலாளியும் மேற்பார்வையாளரும் தேவையான அனுமதியைப் பெற்று, பாதுகாப்பு அபாயங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், திரு ஜொபாயத் வாழ்நாளெல்லாம் சக்கரநாற்காலியில் முடங்கிக்கிடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என அமைச்சு குறிப்பிட்டது. தொழிலாளர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் புறக்கணிக்கும் முதலாளிகளுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சு ஒருபோதும் தயங்காது என்று அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவின் இயக்குநர் திரு செபஸ்டியன் டான் கூறினார்.