போதைப்பொருள் கடத்தல்காரனின் மரண தண்டனையைத் தள்ளிவைத்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

மலேசியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்தினம் அந்தத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாகத் தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளது.

அதிபரிடம் சமர்ப்பித்திருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முறையிட எண்ணுவதன் அடிப்படையில் 31 வயது பன்னீர்செல்வம் பரந்தாமன், தனது மரண தண்டனையை ஒத்திவைக்க விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றது.

அதிபரிடம் மன்னிப்பு கோரும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை, மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் பன்னீர்செல்வம் அறிந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால், மேல்முறையீடு செய்வது குறித்த தெரிவுகளை அறிந்துகொள்ள சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெறுவதற்கு அவருக்குப் போதிய கால அவகாசம் இல்லை என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் சுட்டினார்.

பன்னீர்செல்வத்தின் சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் கருணை மனுவின் நிராகரிப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு வாதங்களை ஒரு வாரத்திற்குள் முழுமையாகத் தயாரிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்