அறுதிப் பெரும்பான்மையுள்ள ஆளுங்கட்சியை சிங்கப்பூர் கொண்டிருக்கவேண்டும்: கோ சொக் டோங்

அறுதிப் பெரும்பான்மையுள்ள ஆளுங்கட்சியை சிங்கப்பூர் கொண்டிருக்கவேண்டும்: கோ சொக் டோங்

2 mins read
6a0bf9c9-e3c5-46d0-9405-0fe55cdd81b5
-

சிங்கப்பூரின் ஆளும் கட்சி இருபது ஆண்டுகளுக்குள் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருப்பதைத் தாம் விரும்புவதாக ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சொக் டோங் தெரிவித்துள்ளார். "தலைமை வகிக்கும் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவேண்டும். என் சொந்த மதிப்பீட்டின்படி கட்சி 75 இடங்கள் முதல் 85 இடங்கள் வரை பெறவேண்டும். அப்படிப் பெற்றால்தான் அது வலுவான அரசாங்கமாகத் தோற்றமளிக்கும்," என்று திரு கோ கூறியுள்ளார். 'டால் ஆர்டர்: த கோ சொக் டோங் ஸ்டோரி' (Tall Order: The Goh Chok Tong Story) என்ற திரு கோவின் சுயசரிதையின் சீனப் பதிப்பின் வெளியீட்டை முன்னிட்டு அவர் சாவ்பாவ் நாளிதழிடம் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார். அந்தப் புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படும். வருங்காலத்தில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இருபது விழுக்காடு இடங்களைப் பெற்றிருக்கவேண்டும் என்ற மதிப்பீட்டைத் திரு கோ அந்தப் பேட்டியில் கூறினார். அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கக்கூடிய "அறிவார்ந்த, ஆக்கபூர்வமான, கூர்ந்தாராயும்" எதிர்க்கட்சியினரை நாடாளுமன்றத்தில் காண விரும்புவதாகத் திரு கோ தெரிவித்தார். அப்போதுதான் உண்மையான விவாதங்கள் நடைபெற முடியும் என்று அவர் கூறினார். அரசாங்கத்தைக் கண்காணிப்பதும் ஈடுகொடுப்பதும் எதிர்க்கட்சியின் பணிகளென தாம் கருதவில்லை என்று கூறிய திரு கோ, அரசாங்கம் தனது வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்பது போல் அந்தக் கருத்து காட்டுவதாகச் சொன்னார். ஓரிரு இடங்களில் மட்டுமான பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருந்தால், அந்த அரசாங்கத்தால் நீண்ட கால நடவடிக்கைகளுக்குத் திட்டமிட முடியாது என்றும் அடுத்தத் தேர்தலைப் பற்றி மட்டுமே நினைத்துச் செயல்படவேண்டும் என்றும் திரு கோ தெரிவித்தார்.