ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கடற்கரைப் பகுதியில் 200 மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் போத்தல்கள், மரத் துண்டுகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் என குப்பை குவிந்துள்ளது.
சிங்கப்பூரில் இவ்வளவு அதிகமாக, மோசமான குப்பைக் குவியல் இது என்று 33 வயது வங்கி ஊழியரான லாரா ஸ்டானர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். சிங்கப்பூர் கடற்கரையில் குப்பை நிறைந்திருக்கும் காட்சி, சுற்றுப் பயணிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், கடல் அலைகள் மேலதிகமான குப்பைகளை அங்கு கொண்டுவந்து சேர்க்கிறது. மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் தென்மேற்குப் பருவ மழைக்காலத்தின்போது வீசும் காற்றினால் கடலில் சேரும் குப்பைகள் சிங்கப்பூர் கரையில் ஒதுங்குவதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையப் பக்கம் தெரிவித்தது. வழக்கமாக வாரத்திற்கு நான்கு முறை சுத்தம் செய்யப்படும் கடற்கரைப் பகுதி இச்சமயத்தில் அன்றாடம் இருமுறை சுத்தம்செய்யப் படுவதாகவும் அது தெரிவித்தது.

