ஜூரோங் தீவிலுள்ள ரசாயன உற்பத்தி ஆலை ஒன்றில் நேற்றுக் காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு சிங்கப்பூரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகிறார். ஏனைய மூவரது நிலைமையும் சீராக உள்ளது என்று மருத்துவமனைப் பேச்சாளர் கூறினார்.
ஜப்பான் மிட்சுவி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையான சிங்கப்பூர் மிட்சுவி எலாஸ்டமர்ஸ் எனும் அந்த ஆலையில் ஏற்பட்ட தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் தற்காப்புப் படைக்கு நேற்றுமுன்தினம் பின்னிரவு 2.20 மணி அளவில் தகவல் கிடைத்து. காலை 4.00 மணிக்கு தீ அணைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நால்வரும் அப்போது பணியில் இருந்ததாக நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். வாகனங்களுக்கும் பொதிகளைக் கட்டுவதற்கும் பயன்படும் பாலிமர்களை அந்நிறவனம் தயாரிக்கிறது.
தீச் சம்பவம் பெட்ரோலிய ரசாயன கசிவு தொடர்பானது எனக்கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தீக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாகக் கூறியது.

