போதைப்பொருள் ஊசி அளித்த மருத்துவர்

போதைப்பொருள் ஊசி அளித்த மருத்துவர்

1 mins read
07566745-c0f9-4f42-960e-9b8840b9845d
-

ஹெச்ஐவி தரவுத்தளத்திலிருந்து தகவல்கள் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிங்கப்பூர் மருத்துவர், தனது மருத்துவத் திறன்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் புழங்கிகளுக்கு ஊசி வழியாகப் போதைப்பொருட்களைச் செலுத்த உதவியிருக்கிறார். 38 வயது லெர் தனது தொழில் தருமத்திற்கு அளவுகடந்த துரோகத்தைச் செய்திருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் நிக்கலஸ் வுவான் கூறினார். சிம் எங் சீ என்ற ஓர் ஆடவருக்கு லெர் போதைப்பொருள் ஊசியைக் கொடுத்ததாக நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் தேசிய பொது சுகாதாரப் பிரிவின் தலைவராக முன்பு பணியாற்றிய லெர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பான இரண்டு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார். தனது ஓரினக் காதலன் மிக்கி புரோச்செஸுக்கு வேலை அனுமதியைப் பெற்றுத்தர அதிகாரிகளை ஏமாற்றியதற்காக லெர் தற்போது ஈராண்டு சிறைத்தண்டனையை நிறைவேற்றி வருகிறார். ஹெச்ஐவி நோயாளியான புரோச்செஸின் ரத்த மாதிரிக்குப் பதிலாகத் தனது சொந்த ரத்த மாதிரியை லெர் சோதனைக்கு அனுப்பியதற்காக அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது. ஹெச்ஐவி நோயுள்ள 14,200 பேரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்ற புரோச்செஸ் அதனை இணையத்தில் வெளியிட்டார். சிங்கப்பூரால் தேடப்படும் நபரான அவர், அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.