சிங்கப்பூரில் நிகழும் 'ஷங்ரிலா' பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் தற்காப்பு அமைச்சர்கள் அவ்விரு நாட்டு உறவின் எதிர்கால நிலையை மேலும் தெளிவுபடுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வல்லரசுகளுக்கு இடையே சீரான, ஆக்ககரமான உறவுகள் இருப்பது முக்கியம் என்று சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங் முன்னர் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (மே 31) தொடங்கும் இந்தப் பேச்சுவார்த்தை 'ஷங்ரிலா' ஹோட்டலில் அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றம் அதிகமாக இருக்கும் இந்நேரத்தில், பேச்சுவார்த்தைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாக இல்லை. தென் சீனக் கடல் விவகாரம், இணையப் பாதுகாப்பு, வடகொரியாவுடனான சமாதான முயற்சி நின்றுபோனது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்படும்.

