சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனங்கள் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் இனி நிற்காமல் செல்லலாம்; அனுமதிக்கப்படாத இடங்களில் U-வளைவுகளை மேற்கொள்ளலாம். இந்த மாற்றங்கள் இன்று முதல் நடப்பிற்கு வருகின்றன.
இதுநாள் வரை அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டுமே சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இனி தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு மருத்துவ வாகனங்கள், 'ரெட் ரைனோ' ஆகிய குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சாலையைப் பயன்படுத்துவோர் மற்றும் ஊழியர் களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக அந்த வாகனங்களை இயக்கும் அதிகாரிகள் குடிமைத் தற்காப்புப் படையின் நடைமுறை களுக்கு இணங்கி நடக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் போக்குவரத்து சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் தொடர்ந்து வாகனத்தை இயக்க முற்படும் அல்லது அனுமதிக்கப் படாத இடத்தில் U-வளைவு மேற்கொள்ள முற்படும் பட்சத்தில் அவர் எச்சரிக்கை ஒலியை எழுப்ப வேண்டும்; சாலைப் பயணிகளை விழிப்பூட்டும் விதமாக விட்டு விட்டு ஒளிரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

