போதைப் புழங்கிகள் ஐவர் கைது

போதைப் புழங்கிகள் ஐவர் கைது

1 mins read
797ea81c-ab68-465d-b9a9-d08ced140524
படம்: போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் இரு வேறு சோதனை நடவடிக்கைகளில் $219,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; போதைப்பொருள் புழங்கிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

புவாங்கோக் கிரசென்டில் நேற்று முன்தினம் காலை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில், 66 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவரின் தனிநபர் நடமாட்ட சாதனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.409 கிலோ ஹெராயின் சிக்கியது. அதையடுத்து, அந்த ஆடவரும் கைதானார்.

சுங்கை காடுட் வே அருகே சோதனையில் ஈடுபட்ட இன்னோர் அதிகாரிகள் குழு, 31 வயது மலேசிய ஆடவர் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த $9,000 ரொக்கத்தைக் கைப்பற்றியது.

முன்னதாக, சுமாங் வாக்கை ஒட்டிய பகுதியில் இவ்விரு சந்தேகப் பேர்வழிகளும் சந்தித்தனர் என்று போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அறிக்கை தெரிவித்தது.

கைதான சிங்கப்பூரரின் வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரைச் சந்திக்க வந்த 58 வயது சிங்கப்பூர் ஆடவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அதே நாளில், ஜாலான் செண்டுடோக்கிற்கு அருகே தனியார் குடியிருப்பு ஒன்றிலும் அதிரடி சோதனை நடத்தப் பட்டது. அங்கு 980 கிராம் 'ஐஸ்', 541 கிராம் கஞ்சா,

327 எக்ஸ்டசி மாத்திரைகள், 19 எரிமின்-5 மாத்திரைகள், 615 கிராம் வெண்ணிறத் தூள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் தொடர்பில் 34 வயதுப் பெண்,

53 வயது ஆடவர் என இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப் பட்டனர். கைதான சந்தேகப் பேர்வழிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.