தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் கண்ணாடிக் கதவை உடைத்த மாது

தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் கண்ணாடிக் கதவை உடைத்த மாது

1 mins read

தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் பயணம் செய்த மாது ஒருவர் நேற்றுக் காலை தோ பாயோ பேருந்துச் சந்திப்பு நிலையத்தின் நெகிழ் கதவில் மோதியதால், அது நொறுங்கிப்போனது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில், நெகிழ் கதவுகள் முழு மையாகத் திறப்பதற்குள் அந்த மாது அதில் மோதியது தெரிய வந்தது (படம்). அந்த மோதலில் நடமாட்டச் சாதனத்தில் பொருத்தப்பட்டிருந்த கூடை கீழே விழுந்தது.

அந்தச் சாதனத்திலிருந்து இறங்கிய மாது, கூடையை எடுத்துக்கொண்டு சாதனத்தைத் தள்ளிக்கொண்டு அவ் விடத்தை விட்டுச் சென்றார்.

சம்பவம் நேற்றுக் காலை 7.35 மணிக்கு நடந்தது என்று குறிப்பிட்ட எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பொதுத் தொடர்புப் பிரிவு மூத்த உதவித் தலைவர் டேமி டான், "இப்படிப்பட்ட இடங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங் களைப் பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்லவேளையாக இச்சம் பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை," என்றார்.

"நொறுங்கிய கண்ணாடித் துண்டுகளை அகற்ற அந்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டன. இதனால் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படவில்லை. சம்பவம் பற்றி போலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது," என்றும் கூறினார் திருவாட்டி டான்.