ஆபத்தான இதயச் செயலிழப்பால் பெண் பாதிப்பு: "எடை குறைப்பு" தயாரிப்புகள் பற்றி சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை

ஆபத்தான இதயச் செயலிழப்பால் பெண் பாதிப்பு: "எடை குறைப்பு" தயாரிப்புகள் பற்றி சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை

2 mins read
1f2ae38e-df74-4e9a-b844-96aa20d03a48
-

ஆபத்தான இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உட்பட, ஐந்து பயனீட்டாளர்கள் விபரீத விளைவுகளைப் புகார் செய்ததைத் தொடர்ந்து, நான்கு வகையான "சுகாதாரத் தயாரிப்புகள்" பற்றி சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இவற்றுள் மூன்று "எடை குறைப்புக்கானவை" என விற்கப்பட்டன.

இந்தத் தயாரிப்புகளைப் பரிசோதித்த ஆணையம், தெரிவிக்கப்படாத ஆபத்தான மருந்துப்பொருட்கள் அவற்றில் இருப்பதாகக் கண்டறிந்தது. "பிபி பாடி", "பெல்லோ ஸ்மேஸ்", "சொக்கோ ஃபிட்" ஆகியவற்றில் சிபுட்ரமின் இருந்தது. எடை குறைப்புக்குத் தடை செய்யப்பட்ட பொருள் சிபுட்ரமின்.

"சீஹார்ஸ் சாப் டு ஜொங் பா ஜி வான்" தயாரிப்பில் ஆபத்தான ஊக்க மருந்தான டெக்சமெத்தசோனும், குளோர்பெனிரமின், ஃபுருஸிமைட் ஆகியனவும் சேர்க்கப்பட்டிருந்தன.

மலேசியாவைத் தளமாகக் கொண்டுள்ள இணைய விற்பனையாளரிடமிருந்து "பிபி பாடி" தயாரிப்பை வாங்கிய 50 வயதுகளிலுள்ள ஒரு பெண், அந்தத் தயாரிப்பைச் சுமார் மூன்று மாதங்கள் உட்கொண்டபிறகு அவரது இதயம் வெகுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். தற்போது ஆபத்தான இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், இன்ஸ்டகிராம் மூலம் "பிபி பாடி" பற்றி தெரிந்துகொண்டதாக ஆணையம் திங்கட்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இருபது வயதுகளில் உள்ள மற்றொரு பெண் "பெல்லோ ஸ்மேஸ்" உட்கொண்ட பிறகு இதயப் படபடப்பும் தூக்கமின்மையும் ஏற்பட்டன. நான்கு நாட்களில் அவருக்குத் தற்கொலை எண்ணங்களும் எழுந்தன. இப்பொருளை எடை குறைப்பதற்காக உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து அவர் வாங்கியிருந்தார்.

முப்பது வயதுகளில் உள்ள இன்னொரு பெண், இரண்டு நாட்களுக்கு "சொக்கோ ஃபிட்" உட்கொண்ட பிறகு இதயப் படபடப்பு ஏற்பட்டது.

இந்தத் தயாரிப்புகளின் விளம்பரங்களை அகற்றும்படி அவற்றை விற்பனை செய்யும் உள்ளூர் இணையத்தளங்களின் நிர்வாகிகளிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அறிமுகமில்லாத வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்தும் இணையத்திலிருந்தும் இதுபோன்ற சுகாதாரத் தயாரிப்புகளை வாங்குவதைத் தவிர்க்கும்படி ஆணையம் ஆலோசனை கூறியது.