புதிய கார் வாங்காமல் பழைய காரையே 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் சாதனை அளவாக 17,000க்கும் மேற்பட்டோர் தங்களது வாகன உரிமைச் சான்றிதழைப் புதுப்பித்தனர்.
இந்த அதிகரிப்பு நீடித்தால், இவ்வாண்டு புதுப்பிக்கப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் 37114 சான்றிதழ்களைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
வாகன உரிமைச் சான்றிதழ்களைப் புதுப்பிப்பவர்கள் சட்டப்படி அனுமதிக்கப்படும் பத்தாண்டு காலத்திற்குப் பிறகும் கார்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் வாகன உரிமைச் சான்றிதழ்களைப் புதுப்பித்தோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலகட்டத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கும், கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களைவிட சுமார் 50 விழுக்காடும் அதிகம்.
சென்ற 2015ஆம் ஆண்டு முழுவதுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு முதல் காலாண்டின் எண்ணிக்கை 76 விழுக்காடு அதிகம்.
வாகன உரிமைச் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி பெரிய கார்களாகவும் மீதி சிறிய கார்களாகவும் இருந்தன. இதற்குமுன், பெரும்பாலும் சிறிய கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ்களே புதுப்பிக்கப்பட்டன. பெரிய கார்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும்போது வாகன உரிமையாளர்கள் பெரிய தொகையை விட்டுக்கொடுக்க நேரிடுவது இதற்குக் காரணம்.

