தாய்லாந்தின் ரட்சபுரி மாவட்டத்திற்குச் சேவைக் கற்றல் பயணம் சென்றிருந்த சிங்கப்பூர் கலைப் பள்ளியின் 13 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சிக்குன்குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசுக்கள் கடித்ததால் அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு, பாதிக்கப்பட்டோரில் சிலர் பேங்காக் கிறிஸ்துவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது அங்குதான் கண்டறியப்பட்டதாகப் பள்ளி தெரிவித்தது. சமூக சேவை திட்டப்பணிக்காக ரட்சபுரியில் உள்ள கிராமத்திற்குச் சென்ற 25 மாணவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் அடங்குவர். பள்ளியில் நான்காம் ஆண்டு பயிலும் இம்மாணவர்கள் 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

