மறுவிற்பனை வீடமைப்பு வளர்ச்சிக்கழக வீடுகளின் (வீவக) விற்பனை ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதத்தில் அதிகமாக உள்ளது. ஆயினும் மறுவிற்பனை வீடுகளின் விலை மாத அடிப்படையில் சற்று குறைந்துள்ளது.
கடந்த மாதம் 2,075 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டதாக எஸ்ஆர்எஸ் சொத்துச்சந்தை இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது, ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட 1,931 வீடுகளைக் காட்டிலும் 7.5 விழுக்காடு அதிகம். கடந்தாண்டு மே மாதத்தில் விற்கப்பட்ட 1,754 வீடுகளைக் காட்டிலும் இவ்வாண்டு மே மாதத்தில் விற்கப்பட்ட வீடுகள் 18.3 விழுக்காடு அதிகம்.
மேலும், மே மாத மறுவிற்பனை வீடுகளின் விலை ஏப்ரல் மாதத்தைவிட 0.2 விழுக்காடு குறைந்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதத்தைக் காட்டிலும் 1.2 விழுக்காடு குறைவு. 2013ஆம் ஆண்டு ஏப்ரலைவிட இது 14.1 விழுக்காடு குறைவாக உள்ளது. வீட்டு விலைகள், முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் 0.1 விழுக்காடும் முதிர்ச்சியடையாத வட்டாரங்களில் 0.2 விழுக்காடும் குறைந்தன.

