லஞ்சம் 10 காசாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்

லஞ்சம் 10 காசாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்

2 mins read
77deb9f4-d6d5-4520-b0d2-86cca6458a3d
ஒவியம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையத்தளம் -

லஞ்ச ஊழலைப் பெருந்தொகைகளுடன் தொடர்புபடுத்துவது வழக்கம். ஆனால், சில்லறை தொகைகள் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழலும் அதே கடுமையுடன் கையாளப்படுவதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் மூத்த துணை இயக்குநர் சின் வீ லியாம் கூறியிருக்கிறார்.இவரும் மற்ற மூத்த அதிகாரிகளும் சென்ற மாதம் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். லஞ்ச ஊழல் செய்கைகளில் யாருக்கும் சலுகைகள் கிடையாது என்றும் அவர் கூறினார். அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி கனரக வாகன ஓட்டுநர்கள் என அனைத்து பின்புலங்களையும் சேர்ந்தவர்களை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு 10 காசுக்கும் ஒரு வெள்ளிக்கும் இடைப்பட்ட லஞ்சம் வாங்கிய கனரக வாகன ஓட்டுநரின் வழக்கை அவர் உதாரணமாக விவரித்தார். கொள்கலன்களை ஏற்றுவதற்காக அல்லது இறக்குவதற்காகக் காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள், வரிசையில் முந்திச்செல்ல அனுமதிப்பதற்கு இந்த ஓட்டுநர் லஞ்சம் வாங்கியிருந்தார். "தங்கள் வேலையைச் செய்வதற்கு லஞ்சம் வாங்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டால், அதன் விளைவுகள் பரவலாகிவிடும்," என்றார் திரு சின். சிங்கப்பூரில் ஊழலற்ற கலாசாரத்தை நிலைநாட்டுவதே குறிக்கோள் என்பதால், சிறிய அளவிலான லஞ்ச ஊழலையும் வாழ்க்கை முறையாகிவிட அனுமதிக்க முடியாது.

காலனித்துவ ஆட்சியின்போது சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் நிலவியது. அப்போது அதை ஒடுக்குவதற்குக் கெடுபிடியான நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை. லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1937ஆம் ஆண்டில்தான் அறிமுகமானது. பிற்பாடு 1952ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டு, 1960ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் அமலாக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற ஆண்டு 358 புகார்கள் கிடைத்தன. இவற்றில் 107 புகார்கள் விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்டன. புகார்களை விசாரிப்பதற்குப் போதிய ஆதாரம் இருந்தால் அவை பதிவு செய்யப்படும்.

புகார்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தனியார் துறையிலிருந்தே பெரும்பாலான புகார்கள் கிடைத்தன. சென்ற ஆண்டு தனியார் துறை பற்றிய 94 புகார்களும் பொதுத் துறையைப் பற்றிய 13 புகார்களும் கிடைத்தன.