வியட்னாம் ஆக்கிரமிப்பு பற்றிய பிரதமரின் பதிவால் சர்ச்சை

வியட்னாம் ஆக்கிரமிப்பு பற்றிய பிரதமரின் பதிவால் சர்ச்சை

2 mins read
4589e082-c610-4348-9f3f-fa9989214d7b
-

1978ஆம் ஆண்டில் கம்போடியாவை வியட்னாம் ஆக்கிரமித்தது பற்றிய பிரதமர் லீ சியன் லூங்கின் அண்மை ஃபேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் மன்னர் ஆலோசனை மன்றத்தின் தலைவருமான ஜெனரல் பிரேம் தின்சுலனோன்டா காலமானது குறித்த இரங்கல் கடிதத்தைத் தற்போதைய தாய்லாந்து பிரதமர் பிரயுத் சனோச்சாவுக்குப் பிரதமர் லீ அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவைத் திரு லீ கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) வெளியிட்டார்.

ஜெனரல் பிரேம் தலைமைத்துவத்தின்போது கம்போடியாவை வியட்னாம் ஆக்கிரமித்ததை ஆசியான் அமைப்பில் அப்போது இருந்த ஐந்து உறுப்பு நாடுகளும் எதிர்த்ததாகப் பிரதமர் லீ தமது பதிவில் குறிப்பிட்டார். தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஜெனரல் பிரேம் வியட்னாமியப் படைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாகத் திரு லீ அந்தப் பதிவில் எழுதினார். வியட்னாமின் இந்த ஆக்கிரமிப்பை ஏற்க மறுப்பதில் ஜெனரல் பிரேம் உறுதியாக இருந்ததாகவும், இதனை எதிர்க்க அவர் ஆசியான் பங்காளிகளுடன் செயல்பட்டதாகவும் திரு லீ கூறினார். இதனால் கம்போடியாவின் ஆக்கிரமிப்புக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அங்கீகாரம் தடுக்கப்பட்டது என்றும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்பு இதனால் நிலைநாட்டப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.

திரு லீயின் கருத்துகளுக்கு கம்போடியாவும் வியட்னாமும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின. திரு லீயின் கருத்துகள் "உண்மையல்ல" என்றும் "ஏற்கத்தகாதவை" என்றும் கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் டீ பான் அந்நாட்டின் ஊடகங்களிடம் தெரிவித்தார். சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னிடம் இந்த விவகாரத்தைப் பற்றி தாம் எடுத்துரைத்துள்ளதாகவும், திரு லீ தமது கருத்துகளைத் திருத்தச் சொல்லி டாக்டர் இங்கிடம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

திரு லீயின் கருத்துகள் வரலாற்று உண்மையைப் பாரபட்சமின்றிப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவை பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்திருப்பதாகவும் வியட்னாமிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. திரு லீயின் ஃபேஸ்புக் பதிவில் வியட்னாமியர்கள் பலர் தங்களது அதிருப்தியைக் கருத்துப் பதிவுகளின் மூலம் தெரிவித்தனர்.