பாலியல் குற்றவாளியைப் பிடித்துக்கொடுத்த இளம்பெண்களைக் கௌரவித்த போலிஸ்

பாலியல் குற்றவாளியைப் பிடித்துக்கொடுத்த இளம்பெண்களைக் கௌரவித்த போலிஸ்

2 mins read
b5487374-40ca-40a0-a959-ff49a49d21e3
-

பாலியல் குற்றவாளி ஒருவரை வளைத்துப் பிடித்த 23 வயது ஹேமா ஸ்ருதி சேகர் உள்ளிட்ட பெண்கள் மூவருக்கு 'பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருது' வழங்கி போலிஸ் கௌரவித்தது. தியோங் பாரு பூங்காவில் பெண் ஒருவரின் முன்பாக ஆபாசமாக நடந்துகொண்டார் அந்த ஆடவர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உதவிக்காக குமாரி ஹேமாவை அணுகினார். அவருக்கு உதவியே ஆகவேண்டும் என முடிவுசெய்த குமாரி ஹேமா, மேலும் நான்கு பெண்களுடன் சேர்ந்து அந்த ஆடவரை விரட்டினார்.

"அவர் ஓடுவதைப் பார்க்க பார்க்க, அவரைப் பிடித்தே தீரவேண்டும் என விரும்பினோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்பியதால் அந்த ஆடவரை விரட்டிப் பிடிக்க நாங்கள் பயப்படவில்லை," என்றார் குமாரி ஹேமா.

சுவருக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள பலமுறை முயன்றபோதும் அந்த ஆடவரால் தப்பிக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட 45 நிமிட விரட்டலுக்குப் பின் கார்நிறுத்தப் பூங்கா ஒன்றில் அந்த ஆடவர் சுற்றி வளைக்கப்பட்டார். பிறகு போலிஸ் வந்து அவரைக் கைது செய்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உதவியாளரான குமாரி ஹேமாவிற்கும் டெபி சியோங் பெய் லின், 23, அஷ்லினா இங் ருய், 24 என்ற மற்ற இரு பெண்களுக்கும் போலிஸ் நேற்று 'பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருது' வழங்கிச் சிறப்பித்தது.

குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த உதவும் பொதுமக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. உயிரை மாய்த்துக்கொள்வதில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள் இருவருக்கும் திருடனைப் பிடித்த உணவு விநியோக ஊழியர் ஒருவருக்கும் நேற்று இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.