சமூக ஊழியர்களுக்கு புதிய பயிற்சித் திட்டம்

சமூக ஊழியர்களுக்கு புதிய பயிற்சித் திட்டம்

2 mins read
Google News Preferred Icon

குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவ சமூக ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கும் புதிய திட்டம் ஒன்றை சிட்டி ­ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் நேற்று அறிமுகப்படுத்தியது.

இந்தப் பயிற்சியின் மூலம் சமூக ஊழியர்கள் வருவாய் குறைந்த குடும்பத்தினரின் நிதி தேவையைச் சரிசெய்வதற்கு எளிதில் உதவ முடியும்.

குறைந்த வருவாய்க் குடும்பத்தினருக்கு நிதி வழங்கி உதவுவதற்கு அப்பால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ஏழ்மையைப் போக்கும் வகையில் தன்னம்பிக்கை ஊட்டி அவர்களுக்கென நிலையான சொத்துகளைப் பெறுவதற்கு நிதியைக் கையாளுதல் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதுடன் வழிகாட்டுதலும் இச் சேவையில் அடங்கும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்­கழகத்தின் ஷா அறநிறுவனத்தின் முன்னாள் மாணவர் இல்லத்தில் நடந்த புதிய திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில், பேராசிரியர் சியா நீ சூன், "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி பற்றிய கல்வி அறிவு புகட்டப்படுவதோடு நிதி மற்றும் அது சார்ந்த சேவைகளைப் புரிந்துகொள்ள உதவி செய்ய வேண்டும். அதற்குச் சரியானவர்கள் சமூக ஊழியர்களே.

"நிதி சார்ந்த சேவைகள் பற்றி சரிவர அறியாத குறைந்த வருவாய்க் குடும்பத்தினருக்கு நிதிசார்ந்த முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசனை வழங்குவதில் சமூக ஊழியர்கள் முக்கிய பங்காற்றலாம்," என்றார்.

இந்த அறிமுக நிகழ்ச்சியில் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்தத் திட்டத்தின் முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் பல­தரப்பட்ட அமைப்புகளில் இருந்து 92 சமூக ஊழியர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 60 பட்டதாரிகளும் பங்குபெற்றனர். இந்த சமூகப் பணிக்கென முன்பு பயிற்சி வகுப்புகள் ஏதும் நடத்தப்படவில்லை.

இப்போது அளிக்கப்படும் பயிற்சியின் மூலம் நிதியை முறையாகக் கையாளுதல், வரவுசெலவுத்திட்டத்தை வகுத்தல், கடன், சேமிப்பு, வீட்டுக்கடன் போன்றவற்றில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கு உதவ முடியும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஏறக்குறைய 250 சமூக ஊழியர்கள் பயிற்சி பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்டி அறநிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சிக்குப் பின்னர் சமூக ஊழி­யர்­களால், வருவாய்க் குறைந்த குடும்பங்கள் தங்களுக்கான நிதி இலக்கை எட்டுவதற்கு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும்.