புக்கோம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஷெல் நிறுவனம் நேற்று தெரிவித்தது.
ஏறக்குறைய 1.3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கக்கூடிய அளவுக்கு இரண்டு பெரிய கிடங்குகள் அங்கு கட்டப்பட்டுள்ளன.
ஷெல் நிறுவனம் எண்ணெய் வர்த்தக நடவடிக்கையை மேலும் மேம்படுத்த இந்தப் புதிய வசதிகள் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வட்டாரத்திலும் உலக நாடுகளிலும் சரி எண்ணெய் சார்ந்த பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.
அதை ஈடுகட்டும் வகையிலும் இந்தத் துறையில் உள்ள போட்டித்தன்மையை மேம்படுத்தவும் இந்த வசதி வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய-=பசிபிக் வட்டாரத்தில் ஷெல் நிறுவனத்தின் சிங்கப்பூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையே மிகப்பெரிய பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி மற்றும் ஏற்றும் மையமாகத் திகழ்கிறது.
ஷெல் நிறுவனத்தின் முக்கியமான கச்சா எண்ணெய்க் கிடங்குகள் ஹாலந்தில் உள்ள ரோட்டர்டமிலும் அமெரிக்காவின் வளைகுடா கடலோரப் பகுதியிலும் உள்ளன.
அதிகக் கொள்ளளவு கச்சா எண்ணெய் சேமிக்கும் வசதிகள் உள்ளதால், விலை குறையும்போது அதிகளவு எண்ணெய் வாங்கி அதன்மூலம் கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்று ஷெல் நிறுவனத்தின் உற்பத்தித் துறை மேலாண்மை துணைத் தலைவர் ரபின் மூல்ஜிக் தெரிவித்தார்.

