பெட்ரோ பிராங்கா அருகே கடலில் மூழ்கிய கப்பலின் உடைந்த பாகங்களால் அப்பகுதியில் கடல்போக்குவரத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.
டோமிக்கன் நாட்டுக் கொடியை ஏந்தியிருந்த 'ஓசன் கூப்பர் 2' என்னும் அந்தக் கப்பல் பெட்ரோ பிராங்காவில் இருந்து மூன்று கடல் மைல் தூரத்தில் மூழ்கியது. சிறு தீவான பெட்ரோ பிராங்கா சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
அதிகமான கப்பல் போக்குவரத்துகளைக் கொண்ட சிங்கப்பூர் கடல் பகுதியில் இந்தக் கப்பல் மூழ்கியது. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூழ்கிய கப்பலால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக இதுவரையிலும் எவ்விதத் தகவலும் இல்லை. அக்கப்பல் ஊழியர்களான மூன்று இந்தோனீசியர்கள் காயங்கள் ஏதுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மூழ்கிய கப்பலின் உடைந்த பாகங்கள் கடலின் மேற்பரப்பில் இருந்து 41 மீட்டர் கடலுக்கடியில் கிடப்பதாக கடல்துறை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக ஆணையம் நேற்று தெரிவித்தது. பொதுவாக கடற்பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 22 மீட்டர் கடலுக்கடியில் கிடக்கும் பொருட்களால் கடல் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.
அவ்வகையில் இந்தக் கப்பலின் சிதைந்த பாகங்கள் 41 மீட்டருக்குக் கீழ் ஆழத்தில் கிடப்பதால் அவற்றால் எவ்வகையிலும் அப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு இடையூறு ஏற்படாது என்றும் ஆணையம் தெரிவித்தது.

