பாலியல் குற்றவாளியை விரட்டிப் பிடித்த வீர மங்கையருக்கு போலிஸ் சிறப்பு கௌரவம்

பாலியல் குற்றவாளியை விரட்டிப் பிடித்த வீர மங்கையருக்கு போலிஸ் சிறப்பு கௌரவம்

2 mins read
f83f8dd7-5e94-481b-8287-94256f01353e
'பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருது' பெற்ற (வலமிருந்து) குமாரி ஹேமா ஸ்ருதி சேகர், குமாரி டெபி சியோங் பெய் லின், குமாரி அஷ்லினா இங் ருய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாலியல் குற்றவாளி ஒருவரை வளைத்துப் பிடித்த 23 வயது ஹேமா ஸ்ருதி சேகர் உள்ளிட்ட இளம்பெண்கள் மூவருக்கு 'பொது நல உணர்வுமிக்க செயலுக்கான விருது' வழங்கி போலிஸ் சிறப் பித்தது.

தியோங் பாரு பூங்காவில் பெண் ஒருவரின் முன்பாக ஆபாச மாக நடந்துகொண்டார் அந்த ஆடவர். இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்தப் பெண் உதவிக்காக குமாரி ஹேமாவை அணுகினார்.

அவருக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவுசெய்த குமாரி ஹேமா, மேலும் நான்கு பெண்களுடன் சேர்ந்து அந்த ஆடவரை விரட்டினார்.

"அவர் ஓடுவதைப் பார்க்க பார்க்க, அவரைப் பிடித்தே தீர வேண்டும் என விரும்பினோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்பியதால் அந்த ஆடவரை விரட்டிப் பிடிக்க நாங்கள் பயப்பட வில்லை," என்றார் குமாரி ஹேமா.

சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள பலமுறை முயன்றபோதும் அந்த ஆடவரால் தப்பிக்க முடியா மல் போனது.

கிட்டத்தட்ட 45 நிமிட விரட் டலுக்குப் பின் கார் நிறுத்தப் பூங்கா ஒன்றில் அந்த ஆடவர் சுற்றி வளைக்கப்பட்டார். பிறகு போலிஸ் வந்து அவரைக் கைது செய்தது. இவ்வாண்டு தொடக் கத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதைத் தொடர்ந்து, நாடாளு மன்ற உதவியாளரான குமாரி ஹேமாவிற்கும் டெபி சியோங் பெய் லின், 23, அஷ்லினா இங் ருய், 24 என்ற மற்ற இரு பெண் களுக்கும் போலிஸ் நேற்று 'பொது நல உணர்வுமிக்க செயலுக்கான விருது' வழங்கிச் சிறப்பித்தது.

குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த உதவும் பொதுமக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள் இருவருக் கும் திருடனைப் பிடித்த உணவு விநியோக ஊழியர் ஒருவருக்கும் நேற்று இவ்விருது வழங்கப்பட்டது.