$250,000 மதிப்பிலான நகைகள் மாயம்; நகை தயாரிப்பு நிறுவன ஊழியர் கைது

$250,000 மதிப்பிலான நகைகள் மாயம்; நகை தயாரிப்பு நிறுவன ஊழியர் கைது

1 mins read

நகை தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு கடைகளிலிருந்து 300க்கு மேற்பட்ட நகைகள் காணாமல்போனதையடுத்து கடந்த புதன்கிழமை 29 வயது மலேசியர் கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காணாமல்போன சுமார் $250,000 மதிப்பிலான நகைகள் பற்றிய தகவல் கிடைத்ததாக நேற்று முன்தினம் போலிசார் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்தக் கடையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதையும் அந்த நபரையும் கிளமென்டி போலிஸ் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், நகைகள் காணாமல்போனது பற்றி போலிசில் புகார் அளிக்கப் படுவதற்கு முன்பாகவே அந்த நபர் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குச் சென்றது தெரியவந்தது.

அதனையடுத்து, மலேசிய போலிசின் உதவியுடன் அந்த நபரை மலேசியாவில் கடந்த புதன்கிழமை கைது செய்து சிங்கப்பூருக்குக் கொண்டு வந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஊழியராக, நம்பிக்கை மோசடி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.