சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் தேசிய சேவை புரிந்த அதிகாரி ஒருவர் பகடி வதை செய்யப்பட்டு உயிரிழந்ததை அடுத்து விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இரண்டு அதிகாரிகள் அதை எதிர்த்து விசாரணை கோருகின்றனர்.
சென்ற ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில் நடந்த பகடி வதை சம்பவத்தில் 22 வயது கார்ப்பரல் கொக் யுவென் சின் மரணமடைந்தார். அந்தச் சம்பவத்தின்போது அவர் கிணற்றில் தள்ளிவிடப்பட்டதையடுத்து மூழ்கி இறந்தார்.
சம்பவம் நடந்த இரவில் அந்தத் தீயணைப்பு நிலையத்தின் தலைமை அதிகாரியாக இருந்த 38 வயது கென்னெத் சோங் சீ பூனும் துணை தலைமை அதிகாரியாக இருந்த 40 வயது நஸ்ஹான் முகமது நாஸியும் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்திருந்தனர்.
சட்டவிரோதமான நடவடிக்கையைத் தடுக்காத காரணத்திற்காக அவர்கள் இருவர் மீதும் கடந்த ஜூலை மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் சில அதிகாரிகள் சிலர் கார்ப்பரல் கோக்கை கிணற்றில் குதிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர் . இதற்காக மேலும் மூன்று அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

