விதிகளை மீறிய பிஎம்டி ஓட்டுநர்கள் பிடிபட்டனர்: வாரஇறுதி சோதனையில் 14 சாதனங்கள் பறிமுதல்

விதிகளை மீறிய பிஎம்டி ஓட்டுநர்கள் பிடிபட்டனர்: வாரஇறுதி சோதனையில் 14 சாதனங்கள் பறிமுதல்

1 mins read
6018a427-65f9-4b46-a632-43776d43ddfe
விதிகளை மீறிய சம்பவங்களில் தொடர்புடைய நடமாட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான தனிநபர் நடமாட்ட சாதன (பிஎம்டி) ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 14 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகளும் நடமாட்ட அமலாக்க அதிகாரிகளும் இணைந்து தெம்பனிஸ், செங்காங், அங் மோ கியோ ஆகிய வட்டாரங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது 23 குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக ஆணையம் குறிப்பிட்டது. விதிகளுக்கு முரணான சாதனங்கள், அதிகவேகம், சாலையில் சாதனத்தை ஓட்டியது போன்ற குற்றங்கள் அவற்றுள் அடங்கும்.

மேலும் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ள இடங்களில் சாதனத்தை நிறுத்தத் தவறிய குற்றமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர மின் ஸ்கூட்டரில் பொய்யான அடையாளக் குறிகளை காட்சிப்படுத்திய சிலரும் பிடிபட்டனர்.

தெம்பனிஸில் பிடிபட்ட ஓர் ஓட்டுநர் 45 கிலோவுக்கு மேற்பட்ட எடை கொண்ட தனிநபர் சாதனத்தைப் பயன்படுத்தியதற்காகப் பிடிபட்டார். அனுமதிக்கப்பட்ட சாதன எடை 20 கிலோ மட்டுமே. மற்றோர் ஓட்டுநர் சாலையில் சாதனத்தை ஓட்டிச் சென்றதைக் கண்ட அதிகாரிகள் அவரை நிறுத்தச் சொன்னார்கள். ஆனால் அதற்கு இணங்காமல் அவர் தமது வாகனத்தை ஓட்டிச் சென்று பின்னர் பிடிபட்டார்.

நடைபாதையில் நடமாட்ட சாதனத்தை ஓட்டும் போது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார்.