போலி திருமணம்: ஏற்பாடு செய்த மாதுக்கு சிறை

போலி திருமணம்: ஏற்பாடு செய்த மாதுக்கு சிறை

2 mins read
2a6744eb-cd43-42ce-a798-ec547780c235
இங்யுவென் தி ஹோங் லான், 35, -

போலி திருமணத்துக்கு ஏற்பாடு செய்த குற்றத்துக்காக சிங்கப்பூர் மாது ஒருவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

இங்யுவென் தி ஹோங் லான், 35, எனப்படும் அந்த மாது வியட்னாமிய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

சிங்கப்பூர் ஆடவருக்கும் வியட்னாமிய பெண்மணிக்கும் போலியாக திருமணம் ஏற்பாடு செய்ததன் மூலம் குடிநுழைவு குற்றம் புரிந்ததற்காக இவருக்கு நீதிமன்றம் (9 மாதம், 8 வாரம்) 11 மாத சிறை தண்டனை விதித்தது.

டுவோங் தி ஆன் கியேயு என்னும் வியட்னாமிய பெண் சிங்கப்பூரில் வருகையாளர் அட்டை பெற அவரை தமது 'வெளிநாட்டு மனைவி' என்று அறிவிக்கும் நிர்ப்பந்தத்தை ஆடவருக்கு ஏற்படுத்தி ஏமாற்றியதற்காகவும் மாது தண்டிக்கப்பட்டார்.

சிங்கப்பூரிலேயே தொடர்ந்து தங்கி இருந்து வேலை செய்ய உதவுமாறு மாதுவை அந்த 34 வயது வியட்னாமியப் பெண் அணுகினார். சிங்கப்பூர் ஆடவரைத் திருமணம் செய்வதுபோல தாம் ஏற்பாடு செய்வதாகவும் அந்த ஏற்பாடுகளுக்கு $20,000 தர வேண்டும் என்றும் மாது கூறினார்.

அதனைத் தொடர்ந்து சோ ஷெங் சாவ், 29, என்னும் சிங்கப்பூரரை மணமகனாக்கிக்கொள்ளுமாறு அவர் யோசனை கூறினார்.

அதற்காக அந்த ஆடவர் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் வியட்னாமிய பெண்ணுக்கு வருகையாளர் அட்டை மற்றும் நிரந்தரவாசம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களில் பொறுப்பாதரவு வழங்க வேண்டியிருந்தது.

அதற்குக் கைமாறாக ஆடவருக்கு $6,000 தரப்படும் என்றும் வியட்னாமியப் பெண்ணின் வருகையாளர் அட்டை நீட்டிப்பு செய்யப்படும்போதெல்லாம் $300 தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு நிரந்தரவாசம் கிடைத்த பின்னர் ஆடவருக்கு மேலும் $3,000 தர பேசி முடிக்கப்பட்டது.

பேசியபடி 2017 பிப்ரவரி 9ஆம் தேதி அந்த ஜோடிக்கு போலி திருமணம் நடத்தப்பட்டது. அதன் பிறகு மாதுக்கு வியட்னாமியப் பெண் $10,000 கொடுத்தார். அதிலிருந்து $6,000 ஆடவருக்குத் தரப்பட்டது.

ஆனால், கணவன் மனைவியாக அவ்விருவரும் சேர்ந்திருக்கவில்லை. பாக்கித் தொகை $10,000க்காக மாதுவின் 'ஸ்பா' வில் வேலை செய்ததோடு அங்கேயே தங்கினார்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் கணவன் மனைவியாக போலியாக அறிவித்த ஆடவரும் பெண்ணும் 2017 ஆகஸ்ட் மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

அந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆடவருக்கும் 2018 ஜனவரி மாதம் பெண்ணுக்கும் தலா ஆறு மாதம், நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. போலி திருமணம் செய்ததற்காகவும் வருகையாளர் அட்டைக்கான விண்ணப்பத்தில் பொய் வாக்குறுதி அளித்ததற்காகவும் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் குடிநுழைவு வசதிபெறும் நோக்கில் போலி திருமணத்தில் ஈடுபடுவது, அதற்கு ஏற்பாடு செய்வது அல்லது அதற்கு உதவி செய்வது, அதன் மூலம் சட்டத்தை ஏமாற்ற முயல்வது போன்றவற்றை கடுமையாகக் கருதுவதாக ஆணையம் எச்சரித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டு வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதம் ஆகியன தண்டனையாக விதிக்கப்படலாம்.