விலைமாதர் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 58% அதிகரிப்பு

விலைமாதர் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 58% அதிகரிப்பு

1 mins read

சிங்கப்பூரில் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களால் அடித்து துன்புறுத்தப்படுவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

விலைமாதர் அல்லது பாலியல் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறிவரும் 'புரொஜெக்ட் எக்ஸ்' என்னும் அரசு சாரா அமைப்பு இந்த விவரத்தைக் கூறியது.

துன்புறுத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு 109 சம்பவங்களைத் தான் கையாண்டதாக அந்த அமைப்பு கூறியது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 58 விழுக்காடு அதிகம். அப்போது வெளி வந்த சம்பவங்களின் எண்ணிக்கை 69.

109 சம்பவங்களில் தனது அலுவலகம் ஆவணப்படுத்தப்படுத்திய 33 சம்பவங்கள் போலிசிடம் புகார் தெரிவிக்கும் அளவுக்கு இருந்ததாகக் குறிப்பிட்ட 'புரொஜெக்ட் எக்ஸ்', இருப்பினும் துன்புறுத்தலைத் தெரிவித்த பெரும்பாலானோர் போலிசிடம் புகார் தெரிவிக்கத் தயங்கியதாகக் கூறியது.

எனவே இறுதியாக ஏழு துன்புறுத்தல் சம்பவங்கள் போலிசிடம் கொண்டு செல்லப்பட்டன.

இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனேசா ஹோ 'த நியூ பேப்பர்' செய்தித்தாளிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தாங்கள் கைது செய்யப்படுவோம் அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்று பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் பயப்படுவதால் போலிசிடம் செல்ல அவர்கள் தயங்குவதாக திருவாட்டி ஹோ கூறினார்.

அவர்கள் அவ்வாறு பயப்படுவதால் தொல்லை தரும் பயங்கர ஆசாமிகள் வெளியில் தாராளமாக உலவுவதாகவும் அவர் சொன்னார்.