வேலை-வாழ்க்கை சமநிலை இளம் தம்பதியரின் முக்கிய பிரச்சினை

2 mins read
c6558c98-802e-4f3f-b35f-2c4494602917
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான நல்லிணக்கம் என்பது இளைய தம்பதிகளுக்கு ஒரு முக்கிய விவகாரம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.

தாமும் தமது மனைவியும் இளம் தம்பதியராக இருந்த சமயத்தில் அந்த நல்லிணக்கத்தை அடைய கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது என்றும் அது அப்போதைய கடின வாழ்க்கைப் போராட்டங்களின் ஒன்றாக இருந்தது என்றும் அவர் நேற்று நினைவுகூர்ந்தார்.

தாம் சந்தித்ததைப் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளம்பெற்றோர்கள் அவற்றுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டும் என்றும் அதற்கான கலந்துரையாடல் தொடர்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அதற்குப் பொறுப்பேற்று உள்ளார் என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

இந்த உதவி கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட தந்தையர் விடுப்பைப் போன்ற நடவடிக்கைகளுக்கு கூடுதலானது என்றார் அவர். 'மீடியாகார்ப்'பும் இதர இரு அமைப்புகளும் இணைந்து நேற்று சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் நடத்திய தந்தையர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று துணைப் பிரதமர் பேசினார்.

"வேலையில் கவனம் செலுத்த வேண்டும்; அதேபோல குழந்தைகளுடனும் நேரத்தைச் செலவிட வேண்டும் = இவ்விரண்டிலும் சமநிலை காண்பது எவ்வாறு என்பதைக் கற்றுக்கொள்வதே குடும்பங்கள் சந்திக்கும் பெரிய போராட்டங்களில் ஒன்று. எங்களுக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது.

"அந்த காலக்கட்டத்தில் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை வீட்டார் போன்றோர் எங்களது குழந்தைகளைக் கவனித்துக்கொண்டது பேருதவியாக இருந்தது. நமது எல்லா தந்தையர் மற்றும் அன்னையருக்கும் வேலையிடத்தை எவ்வாறு வேலை=வாழ்க்கை நல்லிணக்கத்திற்கான சிறந்த இடமாக உருவாக்கித் தரலாம் என்பது பற்றி முதலாளிகள் யோசிக்க வேண்டும்," என்றார் திரு ஹெங்.

57 வயதாகும் துணைப் பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் இருபதுகளின் வயதுடைய மகளும் மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட குடிமக்களுக்கான குழு, நிலையான வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் காண்பதற்கான தீர்வுகளை எட்டும் நோக்கில் எல்லாத் தரப்பு சிங்கப்பூரர்களையும் ஒன்றிணைக்கும் என்று தாம் நம்புவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பிரதமர் லீ சியன் லூங் தமது இன்ஸ்டகிராமில் தந்தையர் தினச் செய்தியைப் பதிவு செய்துள்ளார். தாம் முதன்முதலாக தந்தை ஆனதிலிருந்து தந்தைப் பருவம் பல வழிகளில் தமக்கு மாற்றத்தைத் தந்துள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இருந்தபோதிலும் பிள்ளைகளைப் பராமரித்து அவர்களை நல்லவர்களாக வளர்ப்பதில் தந்தையருக்கு இருக்கும் பொறுப்பு மட்டும் என்றும் மாறாதது," என்று திரு லீ தெரிவித்துள்ளார்.