அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும். அதற்கான முன்னேற்பாடாக வாகனங்களுக்குள்ளே உள்ள பதிவு சாதனம் அடுத்த ஆண்டிலிருந்து இலவசமாக மாற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. 

தற்போதுள்ள வாகனங்களுக்குள்ளே உள்ள சாதனம் அடுத்த ஆண்டு முதல் வாகனம் கண்காணிப்பு மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட பட்டறைகளிலும் இலவசமாக புதிய சாதனத்திற்கு மாற்றித்தரப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. 

தற்போதுள்ள சாதனத்தைவிட புதிய சாதனம் அளவில் பெரிதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

ஒரு குறிப்பிட்ட பாதைக்கு வாகனமோட்டிகள் எதிர்நோக்கக்கூடிய சாலைக் கட்டணம் உட்பட இன்னும் அதிகமான விவரங்களை வழங்கும் சாதனமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாகனங்களுக்கு சாதனங்கள் மாற்றப்படவேண்டும் என்ற நிலையில் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று நம்பப்படுகிறது.