தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு போலிஸ் அதிகாரி மரணம்

ஈசூன் நார்த் அக்கம்பக்க போலிஸ் நிலையத்தில் 28 வயது போலிஸ் அதிகாரி தலையில் துப்பாக்கிச் சூட்டுடன் நேற்றிரவு கிடந்தார்.

நேற்று இரவு 7.30 மணிக்கு போலிஸ் அதிகாரி வேலைக்குச் சென்றதாகவும் பணிக்கான துப்பாக்கியை அப்போது பெற்றதாகவும் போலிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

நேற்றிரவு 9.30 மணிக்கு நிலையத்தின் இளைப்பாறும் இடத்தில் தனியாக அவர் காணப்பட்டார். அவர் அருகில் துப்பாக்கி இருந்தது. 

கூ டெக் புவார் மருத்துவமனைக்கு சுயநினைவின்றி இருந்த அதிகாரியைக் கொண்டு சென்றதும் இரவு 10.26 மணிக்கு காயங்கள் காரணமாக அவர் மரணமடைந்தார். 

போலிஸ் படையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து புலனாய்வு செய்துவருகிறது. இயற்கைக்கு மாறான மரணமாக வகைப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குற்றச் செயல் ஏதும் இல்லை என்று நம்பப்படுகிறது. 

அதிகாரியின் குடும்பத்தினருக்கு இந்தத் தருணத்தில் உதவி நல்கி வருவதாகவும் போலிஸ் படை தெரிவித்துள்ளது.